மழை வந்தாலும் 50 ஆயிரம் பேர் அமரலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

By 
wm

தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது : 

"சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு மகத்தான அளவில் நடைபெற இருக்கிறது. பிரம்மாண்ட வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் உள்ள அகில இந்திய மகளிர் தலைவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.

மழை வந்தாலும் 50 ஆயிரம் மகளிர் அமர்ந்து மாநாட்டின் கருத்துகளை கேட்கிற வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மழை இல்லையென்றால் மாநாட்டு பந்தலின் வெளியில் இன்னும் கூடுதலாக 15 ஆயிரம் இருக்கைகள் போடுவதற்கு தயார்நிலையில் உள்ளது.

தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஒரு லட்சம் மகளிர் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த மாநாட்டில் எந்தெந்தக் கட்சிகளின் மகளிர் தலைவர்கள் வருகிறார்களோ, அவர்களின் கட்சிக் கொடிகள் 50 அடி உயரம் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 50 அடி உயரக் கம்பங்கள் 50 எண்ணிக்கையில் இந்த மாநாட்டு பந்தலைச் சுற்றிப் போடப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா என்பதால், கலைஞருடனானத் தேசியத் தலைவர்கள் தொடர்பு, அவர்களுடைய சமுதாய பங்களிப்பு போன்ற பல்வேறு செய்திகளை விளக்குகிற வகையில் 400க்கும் மேற்பட்ட பதாகைகள் மாநாட்டு பந்தலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரின் இரண்டரை ஆண்டுகால சாதனைகள், குறிப்பாக மகளிர் திட்டங்கள் குறித்தான சாதனைகள் பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 95 சதவிகிதம் மகளிரே பங்கேற்கும் மாநாடு என்பதால் 50 எண்ணிக்கையில் கழிப்பிட வசதிகள், 5 எண்ணிக்கையில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து வருகிற மகளிர் தலைவர்களுக்கு மேடையிலேயே பசுமை அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசியத் தலைவர்களுக்கு சிறுதானிய பலகாரங்கள் மாலையில் வழங்கப்பட இருக்கிறது. இங்கு அமைக்கப்பட்டிருக்கிற 50 ஆயிரம் இருக்கைகளிலும் ஒரு பழச்சாறு பாக்கெட், தண்ணீர் பாட்டில் ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் பத்து இடங்களில் ஆயிரமாயிரம் லிட்டர் சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டிற்கு பசுமையாக வரவேற்க வகையில் வருகிற வழியெங்கும் 3 ஆயிரம் வாழைமரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டிற்கு வருகை தர ஐந்து வழிகள் இருக்கின்றன. இந்த ஐந்து வழிகளிலும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாநாட்டுத் திடலின் பின்புறம் ராணுவத்திற்குச் சொந்தமான இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு அவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஒய்.எம்.சி.ஏ.,வுக்குச் சொந்தமான 6 இடங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. சற்றேரக்குறைய 10 இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, விளக்கு வசதிகள் கூட செய்யப்பட்டிருக்கிறது.

வெளியூரிலிருந்து வருகிற வாகனங்கள் லோட்டஸ் காலனி வழியாக வந்து, அங்கிலிருந்து ஒரு 200 மீட்டர் நடந்து வந்தால் மாநாட்டு பந்தலை வந்தடையலாம். அதேபோல் கிண்டி அண்ணா சாலையில் இருந்து வருபவர்கள் தாடண்டர் நகர் மைதானத்தில் டிபன்ஸ் சாலை வழியாக வந்து 200 மீட்டர் நடந்து வந்தால் மாநாட்டுப் பந்தலை அடையலாம்.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்களின் வாகனங்கள் மாநாட்டு பந்தலுக்கு இடப்புறம் தனியே ஒரு மைதானம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாகனங்களை அங்கே நிறுத்திவிட்டு மாநாட்டு பந்தலை அடையலாம். மாண்புமிகு அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கு மேடையின் வலதுபுறம் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநாட்டு மேடையில் முதல்வர் உள்ளிட்ட 10 பேருக்கும் மேடையின் அருகிலேயே வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த மாநாட்டில் பங்கேற்பவர்கள் எந்தவித சிரமும் இன்றி பங்கேற்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மாநாடு சரியாக 5 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. அதற்கு முன்னர் ஒரு மணிநேரம் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பாடகர்கள் மாலதி, சின்னப்பொண்ணு, மகிழினி மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்" என்று தெரிவித்தார்.

Share this story