60,000 பேர் ஏமாற்றம் : தமிழகம் முழுவதும் 350 ஏக்கர் நிலம் வாங்கி குவித்த மோசடி கும்பல்..

By 
fraud2

சேலத்தை மையமாக கொண்டு செயல்பட்ட அமுதசுரபி கூட்டுறவு நிறுவனம் ஆயிரக்கணக்கானவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியது. 2016 ஜூலை 1-ந் தேதி தொடங்கப்பட்ட அமுதசுரபி எனும் கூட்டுறவு சங்கம், மத்திய வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலம் துறையின்கீழ் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

12 தலைவர்கள், அவர்களுக்குக்கீழ் ஒரு மேலாளர், ஒரு உதவி மேலாளர், ஒவ்வொரு கிளைகளிலும் சேல்ஸ் ஆபீஸர்ஸ் என்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ராமநாதபுரம் கமுதியில் ஏற்கனவே அமுதசுரபி என்னும் நிறுவனத்தின் பெயரில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கியை இந்த நிறுவனம் வாங்கி, அமுத சுரபி என்று பெயர் மாற்றம் செய்து, முதல் கிளையாக நடத்தத் தொடங்கியது.

ஏராளமானோரிடம் அதிக வட்டி தருவதாக பணத்தை முதலீடு பெற்றனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி நடத்தினர். தனியாக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி, அதற்கான எந்திரங்களையும் அந்தந்த கூட்டுறவு கடன் சங்க கிளைகளில் நிறுவினர். சிறு, குறு தொழில் செய்யும் வியாபாரிகளிடம் பணத்தை தினசரி வசூலித்து, அதை ஆண்டு இறுதியில் வட்டியுடன் முழுத்தொகையையும் தருவதாகக் கூறி வந்தது இந்த நிறுவனம்.

இந்த சங்கத்தில் குறுகிய கால முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை சங்க நிர்வாகிகள் வெளியிட்டனர். இதை நம்பிய ஏராளமான முதலீட்டாளர்கள், இந்த சங்கத்தில் முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலம் முடிவடைந்த பிறகும் முதலீட்டாளர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையைத் தராமல் சங்கத்தினர் இழுத்தடித்து வந்துள்ளனர்.

சேலம் அம்மாபேட்டை சேர்ந்த பாஸ்கரன், அயோத்தியாபட்டினம் கிளையில் ரூ.2.9 லட்சம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டதால் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். விசாரணையில் தமிழகம் முழுவதும் 86 கிளைகள் தொடங்கி ரூ.58 கோடி மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தலைவர் ஜெயவேல் (வயது 67), கணக்காளர் கண்ணன் (27) மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்க நிறுவனர் தங்கப்பழம் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் தங்கப்பழத்தை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட தங்கப்பழம் அமுதசுரபி பெயரில் தனியார் கூட்டுறவு சங்கம் தொடங்குவதற்கு முன் அஷ்யூர் அக்ரோ டெக் என்ற நிதி நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு செபியில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மொத்த புகார்தாரர்கள் 60 ஆயிரம் பேர். அவர்களது முதலீட்டில் வாங்கப்பட்ட வால்பாறையில் 60 ஏக்கர், அனுப்பூரில் 39 ஏக்கர், துறையூரில் 250 ஏக்கர் நிலம் உள்ளிட்டவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவிலும் நிலுவையில் உள்ளது.

அமுதசுரபி முதலீடு பணத்தில் 10 கோடி ரூபாயை அக்ரோ டெக் முதலீட்டாளர்களுக்கு வழங்கி அப்போதைக்கு பிரச்சினையை தற்காலிகமாக சமாளித்துள்ளனர். இது தவிர 450 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியது, அமுதசுரபியின் 45 கிளை அலுவலகத்திற்கு வாடகை செலுத்தியது என கணக்கு காட்டி உள்ளனர்.

மீதமுள்ள பணத்தின் நிலவரம் சங்கத்தின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய சேலம் ஜங்ஷன் சேர்ந்த பிரேமானந்தாவுக்கு தான் முழுமையாக தெரியும் என தங்கப்பழம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தலைமறைவாக இருப்பதால் அவரை தேடி வருகிறோம். விரைவில் அவர் சிக்குவார். அப்போது கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
 

Share this story