அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு : தமிழக அரசு
 

By 
7.5% quota for government school students Government of Tamil Nadu

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் :

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, வரும் 13-8-2021 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதோடு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென்று ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், 

அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, 

உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற மாண்பமை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த.முருகேசன் அவர்கள் தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. 

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப்போன்றே, 

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story