காதலியை கொன்று 2 நாட்கள் பிணத்துடன் இருந்த காதலன் : சென்னை விடுதியில் பயங்கரம்

death

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதிக்கு கடந்த 3-ந்தேதி இரவு மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளம் ஜோடியினர் அறை எடுத்து தங்கினார்கள். கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் விடுதி ஊழியர்கள் நேற்று காலையில் அறை அருகே சென்றனர். அப்போது விடுதி அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அறை கதவு உள்புறம் தாழிடப்பட்டு இருந்தது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை மீது இளம் ஜோடி இருவரும் பிணமாக கிடந்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் மேற்கு வங்காள மாநிலம் பங்குரா பகுதியை சேர்ந்த காதல் ஜோடி என்று தெரிய வந்தது. அவர்கள் பெயர் பிரசெஞ்சித் கோஷ், அர்பிதா பால். இருவரும் கணவன்-மனைவி என்று கூறி விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியதற்கான தடயம் காணப்பட்டது. எனவே அந்த பெண்ணை காதலன் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பின்னர் காதலியின் பிணத்துடன் பிரசெஞ்சித் கோஷ் 2 நாட்கள் தனியாக இருந்துள்ளார். அதன்பிறகு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். காதலியை கொலை செய்த விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இளம்பெண் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதாலேயே அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. பிரசெஞ்சித் கோஷ் இறந்து 2 நாட்களே இருக்கலாம் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் இல்லை.

அவர்கள் இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் ஜோடி இருவரும் மேற்கு வங்காளத்தில் இருந்து எதற்காக சென்னை வந்தனர்.

காதலியை கொன்று பிரசெஞ்சித் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களின் மேற்கு வங்காள முகவரியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் சந்தேக மரணம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Share this story