வளர்ச்சிக்கு எது தடையோ, அதை தகர்த்தெறியுங்கள் : மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

By 
mksta

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :

'படித்து முடித்து வெளியில் வருபவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் உருவாக்கித் தரும் சூழலை உருவாக்கி வருகிறோம். 

இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலமாக, ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. 

அதனால்தான், தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14-ஆவது இடத்தில் இருந்து ஒரே ஆண்டில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது நம்முடைய தமிழ்நாடு. 

புதிய புதிய தொழில்களை ஈர்ப்பதற்காக தமிழக அரசு தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. 

கடந்த ஓராண்டில், செமி-கண்டக்டர்கள், மின் வாகனங்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள், ஒருங்கிணைந்த சூரிய ஒளி மின்னழுத்திகள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், தரவு மையங்கள் போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள், தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. 

இதற்குத் தேவையான அறிவுத் திறனை உருவாக்கவே 'நான் முதல்வன்' திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். 

ஆண்டுதோறும் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 10 இலட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் திட்டமிட மேற்கொண்டு உள்ளோம். 

அவர்களுக்கு வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்து, அவர்களின் திறமையை அவர்களுக்கு உணர்த்தி, அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவே நன்மை பெற்றிடும் வகையில், இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 

நான் அடிக்கடி சொல்லி வருவதுபோல, 2026-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். அதில் நீங்களும் இடம் பெற்றாகவேண்டும். 

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். அதிலும் உங்கள் பங்கு இருக்க வேண்டும். 

எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய உலகத்தை உருவாக்க நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள். உங்களை அனைத்து வகையிலும் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

உங்களது வளர்ச்சிக்குத் தடையாக எது இருந்தாலும், அதனை தகர்த்து முன்னேற்றம் காணுங்கள்' என்றார்.
*

Share this story