கனமழை : வெள்ளத்தில் சிக்கி 29 பேர் பரிதாப பலி..

pilli

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. டஜன் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கனமழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை, வெள்ளத்துக்கு 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பிலிப்பைன்சில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Share this story