திருமண நாளையொட்டி, மணமகளுக்கு கன்னித்தன்மை சோதனை; வெடித்தது பூகம்பம்..

By 
virgin

ராஜஸ்தானில் சன்சி நாடோடி சமூகத்தில் திருமணம் ஆனதும், புதுமண பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யும் வினோத வழக்கம் உள்ளது. இந்த சோதனையில் அவர் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் உள்ளார் என்று நம்பப்படும்.

ராஜஸ்தானில் இது ஒரு சமூக நடைமுறையாக குகடி பிரடா என்ற பெயரில் இருந்து வருகிறது. இந்நிலையில், பில்வாரா மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயது இளம்பெண் தனது புகுந்த வீட்டார் கொடுமைப்படுத்துகின்றனர் என போலீசில் புகார் அளித்து உள்ளார்.

தன்னை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனை செய்ததாகவும், அதில் தோல்வி அடைந்ததும் அடித்து விரட்டுகின்றனர் எனவும் தெரிவித்து உள்ளார். அவருக்கு பகோர் நகரில் கடந்த மே 11-ந்தேதி திருமணம் நடந்து உள்ளது. இதன்பின், அதே நாளில் இளம்பெண்ணுக்கு உடனடியாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டு உள்ளது. கன்னித்தன்மை சோதனையில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

அதன்பின்னர், இரவு வரை மணமகன் வீட்டாரின் விவாதம் நீடித்து உள்ளது. பயத்தில் அந்த பெண் எதுவும் கூறாமல் இருந்து உள்ளார். அவரை கணவர் மற்றும் உறவினர்கள் அடித்து உள்ளனர்.

அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு பற்றி அறிந்ததும், கன்னித்தன்மை சோதனையிலும் தோல்வி அடைந்த ஆத்திரத்தில், அவரது கணவன் வீட்டார் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

பின்னர் இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்துக்கு சென்றுள்ளது. மே 31-ந்தேதி கோவிலில் நடந்த பஞ்சாயத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதன்பின்பு அந்த பெண்ணை வீட்டில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர். இதுபற்றி தனது கணவர், உறவினர்களுக்கு எதிராக அந்த பெண், போலீசில் கடந்த சனிக்கிழமை புகார் தெரிவித்து உள்ளார்.

அதன்பேரில் மணமகன் வீட்டார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

Share this story