தப்பிக்க எண்ணி, லஞ்சப் பணத்தை விழுங்கிய போலீஸ் அதிகாரி : பரபரப்பு நிகழ்வு..

அரியானா மாநிலம் பரிதாபாத்தில், மாடு திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். ஆனால், அடுத்து நடந்த சம்பவம் விசாரணை அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தது.
பரிதாபாத்தைச் சேர்ந்த ஷுப்நாத் என்பவரின் எருமை மாட்டை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். மாட்டை கண்டுபிடிக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என அவரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கூறியிருக்கிறார்.
முதலில் 6000 ரூபாய் கொடுத்த ஷுப்நாத், மீதமுள்ள தொகையை கொடுப்பதற்கு முன்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக ஷுப்நாத்தை அனுப்பி பணத்தை கொடுக்க செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை வாங்கும்போது சுற்றி வளைத்து பிடித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சப்-இன்ஸ்பெக்டர், லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். வாயில் இருந்த அந்த பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முயற்சித்தனர்.
ஆனால் அவர்களால் முடியவில்லை. இறுதியில் அவரை காரில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து பணத்தை கைப்பற்ற முயற்சிப்பதும், சப்-இன்ஸ்பெக்டர் அவசரம் அவசரமாக பணத்தை விழுங்குவதும் பதிவாகி உள்ளது.
பணத்தை மீட்க அதிகாரிகள் போராடுகின்றனர். அதிகாரிகளில் ஒருவர் பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை வைக்கிறார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டரோ வாயை திறக்காமல் பணத்தை அப்படியே விழுங்குகிறார்.
இந்த போராட்டத்தில் தலையிட்ட மற்றொரு நபரை அதிகாரிகள் தடுத்து வெளியே தள்ளிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.