பாஜக தொண்டர்களுக்கு, பிரதமர் மோடி விடுத்த கட்டளை..

By 
bjpmeet

தேர்தல் வியூகங்கள் வகுப்பது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க பாஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க. தேசியத் தலைவராக 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஜே.பி.நட்டா தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

பா.ஜ.க. இப்போது வெறும் ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல. சமூக-பொருளாதார நிலைமைகளை மாற்றக்கூடிய ஒரு செயல்திறன் கொண்ட இயக்கம். எனவே, 2024 மக்களவை தேர்தலுக்காக கட்சி தொண்டர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்க வேண்டும். வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

மக்களவை தேர்தலை சந்திக்க நமக்கு 400 நாட்களே உள்ளன. அதனை மக்களுக்காக அர்ப்பணித்திடுங்கள். மக்களுக்கு சேவை செய்ய என்னென்ன தேவையோ அத்தனையும் செய்ய வேண்டும். நாம் வரலாறு படைக்க வேண்டும். சீக்கியர்கள், போராக்கள், பஸ்மண்டாக்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் தேர்தல் நோக்கத்திற்காக இல்லாமல் பொதுவாக அணுகுங்கள்.

அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக நாட்டில் எல்லைப் பகுதிகளை இணைக்கும் இடங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்துங்கள். ஒன் இந்தியா, சுப்ரீம் இந்தியா என்பதை நோக்கி பா.ஜ.க.வினர் பணியாற்ற வேண்டும். சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களை குறிப்பாக எல்லையோர கிராமங்களில் நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களுடன் இன்னும் அதிகமாக தொடர்பில் இருக்க முடியும்.

நமது வளர்ச்சி திட்டங்கள் ஊரக பகுதிகளையும் போய் சேரும். கிராமங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். அரசின் சிறப்புத் திட்டங்களை, கிராமங்களுக்கு கொண்டு செல்லவேண்டும் அப்போதுதான் நமது வளர்ச்சித் திட்டங்கள் இந்தப் பகுதிகளைச் சென்றடையும். தங்கள் பகுதி வளர்ச்சியில் பா.ஜ.க. தொண்டர்களும் பங்கு வகிக்க வேண்டும்.

நமது ஒருங்கிணைப்பை அதிகரிப்பதன் மூலம் மாநிலங்கள் அனைத்தும் உணர்வுபூர்வமாக இணைக்கப்படும். குறிப்பாக, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்துங்கள். இளம் வாக்காளர்கள் இந்திய அரசியல் வரலாற்றை அதிகம் பார்த்து இருக்க மாட்டார்கள். முந்தைய அரசாங்கம் செய்த தவறுகள் மற்றும் ஊழல்களை பற்றி அவர்களுக்கு தெரியாது. மோசமான ஆட்சியில் இருந்து நல்லாட்சிக்கு எப்படி வந்துள்ளோம் என்பதை இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

சமூகத்தின் அனைத்துப் பகுதிகளுடனும் உணர்வுப்பூர்வமாக இணைக்க வேண்டும். நாட்டையும் சமுதாயத்தையும் மாற்றும் பணியை பா.ஜ.க. செய்ய வேண்டும். இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி,பா.ஜ.க.வின் நல்லாட்சி குறித்து தெரியப்படுத்துங்கள். ஜனநாயக வழிகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி நல்லாட்சியின் ஒரு பகுதியாக இருக்க அவர்களுக்கு உதவ வேண்டும்.

எல்லைப் பகுதிகள் உட்பட கிராமங்களில் அமைப்பை வலுப்படுத்துவதில் கட்சி கவனம் செலுத்த வேண்டும், எல்லா தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாக கருத வேண்டாம். நாட்டின் சிறந்த சகாப்தம் வரப்போகிறது. அதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

'ஏக் பாரத் ஸ்ரேஸ்த் பாரத்' என்ற தீர்மானத்தின் கீழ், அனைத்து மாநிலங்களும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து, ஒருவருக்கொருவர் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு இடமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Share this story