தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலம் தமிழகம் : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

busi

சென்னை நுங்கம்பக்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது : 

இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்துத் துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாகக் கொண்டுள்ளோம் என்றால், அதற்கு அரசியல்-சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும்-தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது.

இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம். தொழிற்சங்க இயக்கம் என்பது இங்குதான் முதன் முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள்.

அரசியல் உரிமையை மட்டு மல்ல; தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது. தூத்துக்குடியில் இருந்த ஹார்வி ஆலையில் தொழிற்சங்கத்தை 1905-ம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். அந்த மாவீரர் சிதம்பரனாருக்கு இன்று, நினைவு நாள்.

சென்னை பக்கிங்காம் கர்நாடிக் ஆலை-ஆகிய இடங்களில் தொழிலாளர் போராட்டங்கள் நடந்தது. இதன் காரணமாக, தொழிலாளர் ஒற்றுமை மட்டுமல்ல-தொழிலாளருக்கான சலுகைகள்-சட்டங்கள் ஆகியவை உருவானது.

இன்னொரு பக்கத்தில், தொழில் அதிபர்களும் தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை வழங்கவும், தங்களது தொழில்களை வளர்க்கவும் முயற்சிகள் எடுத்தார்கள். அப்படி உருவானதுதான் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு. இன்று சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த தென் இந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு, சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த பதினைந்து மாத காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழக எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்கு கிறார்கள்.

பல் வேறு நாடு களில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். அந்த வகையில்தான் தொழில் அதிபர்களை-தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

அரசு, தொழில் அதிபர்கள்-தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோத்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். இதுவே இந்த அரசினுடைய குறிக்கோள். இவற்றை நோக்கியே நாம் பயணிக்கி றோம். இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this story