நீட் தேர்வுக்கு உதவுவதாக கூறி, ஹோட்டலில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..

By 
rape3

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவர் சேலத்தில் தங்கி நீட் பரீட்சைக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். 19 வயது நிரம்பிய அந்த பெண் ஒரு நாள் அருகில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது, தன்னுடைய செல்போனில் பேலன்ஸ் இல்லாத காரணத்தினால் அவ்வழியே வந்த சக்திதாசன் என்ற நபரிடம் செல்போனை பெற்று தனது வீட்டாரிடம் பேசிவிட்டு அவரிடம் திரும்ப கொடுத்துள்ளார். 

அப்பொழுது அந்த இளம் பெண்ணிடம் பேச்சு கொடுத்த சக்திதாசன், தான் விலங்கியல் பட்டத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்று பிஎச்டி முடித்துள்ள காரணத்தினால், அந்த இளம் பெண்ணுக்கு நீட் தேர்வில் உதவியாக இருக்க முடியும் என்று கூறி பேசியுள்ளார். அந்த இளம் பெண்ணும் அவருடைய பேச்சைக் கேட்டு தனது செல்போன் எண்ணை அவரிடம் கொடுத்துள்ளார். 

செல்போன் எண் பரிமாற்றம் நடந்த பிறகு, இருவரும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். ஒருமுறை தேர்வு கட்டணமாக சுமார் 4000 ரூபாயை அந்த இளம் பெண்ணுக்கு செலுத்தி இருக்கிறார் சக்திதாசன். இவர்களுடைய செல்போன் பழக்கம் ஓரிரு வாரங்கள் கடந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சக்திதாசன் வேலை விஷயமாக தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு தான் வந்துள்ளதாகவும், அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருப்பதாகவும் அந்த இளம் பெண்ணிடம் கூறியுள்ளார். 

மேலும் அவர் தனது ஹோட்டல் அறைக்கு வந்தால், அவருக்கு நீட் சம்பந்தமாக இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளார். இதை அறிந்து அந்த ஹோட்டல் அறைக்கு சென்ற அந்த பெண்ணிடம் சில நிமிடங்களில் பேசிக் கொண்டிருந்த அந்த நபர், திடீரென அவரை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது திடுக்கிட்டு போன அந்த இளம் பெண், அவரோடு போராட தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது பையில் இருந்த கத்தியை எடுத்து அவரை மிரட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். 

ஆனால் அதற்கு பிடி கொடுக்காத அந்த இளம் பெண், அவரோடு போராடிய நிலையில், சக்திதாசன் அந்த இளம் பெண்ணை வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். உடனே அந்த இளம் பெண் தன்னிடமிருந்து சக்திகளை திரட்டி கொண்டு, அந்த கத்தியை பிடுங்கி சக்திதாசனை பலமுறை கத்தியால் குத்திவிட்டு அந்த ஹோட்டல் ரூமில் இருந்து வெளியே ஓடிச்சென்ற நிலையில், இதை கண்ட ஹோட்டல் ஊழியர்கள் பதறிப் போய் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 

தகவல் அறிந்து வந்த காவலர்கள் அந்த பெண்ணையும் சக்திதாசனையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தற்பொழுது சக்திதாசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த பெண்ணுக்கும் சிகிச்சை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் சக்திதாசன் பட்டம் பெற்றவரா என்பது குறித்த தகவல்கள் ஏதுமில்லை. நீட் தேர்வை காரணமாக காட்டி இளம் பெண்ணுக்கு நடந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story