தமிழகம் முழுவதும் 1-ந்தேதி முதல் ஏ.சி.பஸ்கள் இயக்கம்

By 
AC buses will run throughout Tamil Nadu from the 1st

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், படிப்படியாக தளர்வுகள் அறிவித்து இயல்பு நிலை திரும்பியது. 

அனுமதி :

தற்போது, தொற்று கட்டுக்குள் இருப்பதால், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களை இயக்க தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இத்துறையின் செயலாளர் குமார் ஜெயந்த் இதுதொடர்பாக, போக்குவரத்து செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு இடையே மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு 50 சதவீத இருக்கைகளுடன் குளிர்சாதன பேருந்துகளை இயக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, தமிழகத்தில் குளிர்சாதன வசதி உள்ள பேருந்துகளை இயக்க அரசு தயாராக உள்ளது. 

1-ந்தேதி :

அக்டோபர் 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களுக்கும் ஏ.சி. பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது :

8 அரசு போக்குவரத்து கழகங்களில் 700 ஏ.சி. பஸ்கள் உள்ளன. இதில், விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 340 ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மேலாக ஏ.சி. பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

ஆனாலும், அவற்றின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஏ.சி.பஸ்கள் இயக்கப்படாததால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் ஏ.சி. பஸ்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. 

மாத இறுதி ஆகிவிட்டதால், தற்போது பஸ்களை இயக்கினால், இந்த மாதம் முழுவதிற்கும் வரி செலுத்தவேண்டும். அதனால் அக்டோபர் 1-ந் தேதி முதல் ஏ.சி. பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஏ.சி. பஸ்கள் இயக்கப்படும்' என்றார்.

Share this story