சுங்கச் சாவடிகளை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு தகவல்

By 
Action will be taken to reduce customs posts Government of Tamil Nadu

தமிழக சட்டசபையில், இன்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா சுங்கச்சாவடி தொடர்பாக, சிறப்பு கவன ஈர்ப்பை கொண்டுவந்து பேசினார்.

அவர் கூறும்போது, ‘15 ஆண்டுகளைக் கடந்த பிறகும், சுங்கச்சாவடிகளில் கட்டணம், கந்துவட்டி போல வசூலிக்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கும், தேவையில்லாத சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதமும், செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்தும், இந்த சுங்க கட்டணங்களில் விதிமுறைகளை மீறி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரினார்.

இதற்குப் பதில் அளித்து, அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது :

நகர் பகுதிகளில் இருந்து 10 கி.மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளில், கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்கிற விதி உள்ளது. 

இதையடுத்து பரனூர், வானகரம், சென்ன சமுத்திரம் உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக, டெல்லி சென்று முறையிட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் நெடுஞ்சாலை விதிகளின்படி, 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்கவேண்டும். ஆனால், 41 சுங்கச்சாவடிகள் உள்ளன. 

இதனை கருத்தில்கொண்டு கூடுதலாக இருக்கும் சுங்கச்சாவடிகளை குறைக்கவும், மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Share this story