ஏ.ஆர் ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் குளறுபடி குறித்து, மகள்  கதீஜா- நடிகர் கார்த்தி பதிவுகள்..

By 
karthi1

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின்போது கடும் குளறுபடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை துணை கமிஷனரான தீபா சத்யன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததாக பலர் விமர்சித்து வந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது மகள் கதீஜா ரகுமான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

"இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் ஊழல் செய்ததை போல சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சிலர் இந்த விவகாரத்தில் மலிவான அரசியல் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைத்திற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் 100 சதவீதம் காரணம். எனினும் ஏ.ஆர்.ரகுமான் அதற்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தார்.

கதீஜா ரகுமான் பதிவு ஏ.ஆர்.ரகுமான், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016 -ஆம் ஆண்டு சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களில் 'நெஞ்சே எழு' என்ற இசை நிகழ்ச்சி நடத்தியவர், கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018- ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்தார். திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தினார். அவர் குறித்து பேசும் முன் இதனையெல்லாம் யோசித்து பேசுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நாம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஏ.ஆர்.ரகுமான் மீது அன்பு செலுத்தி வருகிறோம். இசை நிகழ்ச்சியின் போது நடந்தது தற்செயலானது. இதனால் ஏ.ஆர்.ரகுமான் பாதிக்கப்பட்டிருப்பார்.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் என் குடும்பமும் அந்த நிகழ்ச்சியில் இருந்தது, ஆனால் நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்று நம்புகிறேன். நம் அனைவர் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பு செலுத்துவது போன்று ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து அன்பை தேர்ந்தெடுங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 



 

Share this story