நடிகர் விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும்: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..

By 
vitar

நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் அஞ்சாமை. இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். இயக்குனர் எஸ்.பி. சுப்புராமன் இயக்கியுள்ள இப்படம்,  நீட் தேர்வால் நடக்கும் கொடுமைகளை எடுத்துரைக்கும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் மாநில காட்சிகள் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் நீட் தேர்வு அவசியமா? அதனால் ஏழை எளிய மாணவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது அஞ்சாமை படம்.

தற்போது காவல்துறையில் அஞ்சாமை படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், நீட் தேர்வை தடுக்கும் வகையில் அஞ்சாமை படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளது.

எனவே, அஞ்சாமை பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Share this story