ஆர்யன்கான் விவகாரம் : மத்திய அமைச்சரிடம், போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மனைவி மனு

By 
Aryankhan affair Petition to the Union Minister, wife of a drug prevention officer

மும்பை அருகே கப்பலில், போதை பொருள் கடத்தல் மற்றும் அவற்றை பயன்படுத்தியதற்காக, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், கடந்த அக்டோபர் 2-ம் தேதி கைது செய்யப்பட்டார். 

இதற்காக, போதைப் பொருள் தடுப்புப்பிரிவு  மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவை, தனிப்பட்ட முறையில் மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் தாக்கி பேசி வருகிறார்.

தொடரும் குற்றச்சாட்டுகள் :

சமீர் வான்கடே பிறப்பால் ஒரு முஸ்லிம், ஆனால் அவர் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என, போலியாக சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். 

ஆர்யன் கானை விடுவிக்க, லஞ்சமாக பணம் தரவேண்டும் என மிரட்டினார், சட்டவிரோதமாக போனை ஒட்டுக்கேட்டார் என சமீர் வான்கடே மீது, நவாப் மாலிக் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

தனிப்படை விசாரிப்பு :

நவாப் மாலிக்கின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால், சமீரை எந்த நேரமும் மும்பை போலீசார் கைது செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் மீதான  குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சமீர் வான்கடே மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க, போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் எஸ்.என்.பிரதான், துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங்கை நியமித்துள்ளார். 

சமீர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்.

ரூ. 25 கோடி? :

பிரபாகர் செயில் என்ற சாட்சி, சமீர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யனை விடுவிக்க, 25 கோடி ரூபாய் கேட்டதாக கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தற்போது அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. 

இது தவிர, மும்பை போலீசாரும் சமீர் மீதான ஊழல் புகாரை விசாரித்து வருகின்றனர்.

மத்திய அமைச்சருடன் சந்திப்பு :

இந்நிலையில் சமீரின் மனைவி, முதலமைச்சர்  உத்தவ் தாக்கரேவுக்கு  கடிதம் ஒன்று எழுதினார். அதில் பெண்ணின் மரியாதை நகைச்சுவை ஆக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீர் வான்கடேவின் தந்தை தினியான்தேவ் வான்கடே மற்றும் மனைவி கிராந்தி ரெட்கர் வான்கடே ஆகியோர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவை இன்று சந்தித்தனர். அப்போது,  கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.
*

Share this story