ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன கொள்ளை : மேலும் ஒருவன் கைது;
பின்னணியில் யார்?

By 
ATM Innovative robbery in machinery one more arrest; Who is in the background

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கியில் பணம் டெபாசிட் செய்யும் ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையர்கள் கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரூ. 45 லட்சம் :

கடந்த 15-ந்தேதி முதல் 18-ந்தேதிக்குள் 14 இடங்களில் ரூ.45 லட்சம் கொள்ளை போயிருப்பதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கூடுதல் கமி‌ஷனர் கண்ணன் மேற்பார்வையில் தென் சென்னை இணை கமி‌ஷனர் நரேந்திர நாயர், தி.நகர் துணை கமி‌ஷனர் ஹரிகிரன் பிரசாத் ஆகியோரது தலைமையில் அரியானா கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் அரியானாவுக்கு விரைந்து சென்று நேற்று முன்தினம் கொள்ளை கும்பலை சுற்றி வளைத்தனர். இதில் அரியானா மாநிலத்தில் உள்ள பல்லப்கர்க் என்ற இடத்தில் வசித்து வந்த அமீர் அர்ஷ் என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

அவனை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் பூந்தமல்லி கோர்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர், விசாரணைக்காக அவனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி, போலீசார் கோர்ட்டில் மனு செய்தனர். அதை ஏற்று 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது.

கூட்டாளி வீரேந்தர் :

அவரிடம் நேற்று இரவு தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். 

அப்போது, அமீர் அர்சும், அவனது கூட்டாளி வீரேந்தர் என்பவனும் சேர்ந்து சென்னையில் 6 இடங்களில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளான்.

போலீஸ் பறிமுதல் :

குறிப்பாக ராயலா நகர், வடபழனி, பாண்டிபஜார், தரமணி, வேளச்சேரி, கே.கே. நகர் ஆகிய இடங்களில் கொள்ளையடித்ததாகவும் இந்த இடங்களை கூகுள் மேப் உதவியுடன் கண்டுபிடித்ததாகவும் கூறினான். அவனிடம் இருந்து சுமார் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவனிடம், கூட்டாளியான வீரேந்தர் பதுங்கி இருக்கும் இடம் பற்றி போலீசார் விசாரித்தனர். 

அவன் கொடுத்த தகவலின் பேரில், அரியானாவில் முகாமிட்டுள்ள துணை கமி‌ஷனர் ஹரிகிரன் பிரசாத் தலைமையிலான தனிப்படையினர் இன்று வீரேந்தர் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றனர். அங்கு அவனை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

அவனிடம் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் எங்கெங்கு பிரிந்து சென்று தலைமறைவாக இருக்கிறார்கள் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இது எங்கள் தொழில் :

இந்த வழக்கில் இதுவரை 10 பேர் பிடிபட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வர போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

இவர்களில், ஒரு சிலர் போலீசாரின் விசாரணை வளையத்தில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை வைத்து கொள்ளை கும்பலை மொத்தமாக பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

அமீர் அர்சிடம் விசாரித்தபோது, தங்கள் கிராமத்தில் இதை தொழிலாக வைத்திருப்பதாகவும், தங்களுக்கு திட்டம் மட்டும் வகுத்து கொடுப்பார்கள். 

அதன்படி, கொள்ளையடிக்க செல்வோம். மற்றபடி இதில் ஈடுபட்டுள்ள யாரையும் எங்களுக்கு தெரியாது.

வழக்கமாக கொள்ளையடிக்க செல்லும் போது செல்போன்களை பயன்படுத்துவது கிடையாது. ஆனால் சென்னையில் செல்போனை பயன்படுத்தியதால் சிக்கி கொண்டதாகவும் கூறினான்.

பின்னணி யார்? :

எனவே, இந்த கும்பலுக்கு பின்னணியில் இருப்பவன் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

அரியானாவில் இன்று பிடிபட்ட வீரேந்தரையும் சென்னைக்கு போலீசார் அழைத்து வருகிறார்கள்.

அமீர் அர்சும், வீரேந்தரும் அரும்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்கள். அந்த அறையையும் போலீசார் பார்வையிட்டு சோதனை நடத்தினார்கள்.

போலீஸ் காவலில் இருக்கும் அமீர் அர்சை ஏ.டி.எம். மையங்களுக்கு அழைத்துச்சென்று கொள்ளையடித்த சம்பவத்தை நடித்துக்காட்ட சொல்லி வீடியோ பதிவு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Share this story