பாமக பிரமுகர் கொலை : திமுக எம்பி ரமேஷ், இன்று சரணடைந்தார்

Bamaka Pramukar murder DMK MP Ramesh surrenders today

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, மேல் மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 55). பா.ம.க. பிரமுகர்.

இவர் பணிக்கன் குப்பத்தில் உள்ள கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

கடந்த மாதம் 19-ந் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இதனைத் தொடர்ந்து, கோவிந்த ராசுவின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கோவிந்தராசுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

இதையடுத்து, கோவிந்தராசுவின் மர்ம மரணம் வழக்கை கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாற்றினர்.

இது தொடர்பாக கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லாப்பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், ரமேஷ் எம்.பி. தவிர மற்ற 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பதாக ரமேஷ் எம்.பி. கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் எம்.பி. சரணடைந்தார்.

Share this story