டெல்லியில், வெடிகுண்டு சதித்திட்டம் கண்டுபிடிப்பு : உளவு நிறுவனம் எச்சரிக்கை..

By 
Bomb plot in Delhi Intelligence agency warns

காஷ்மீர் மாநிலம் ஜம்மு விமான படைத்தளத்தில், கடந்த மாதம் 27-ந்தேதி 2 மர்ம டிரோன்கள் என்கிற ஆளில்லா குட்டி விமானம் பறந்து வந்து தாக்குதல் நடத்தின.

கண்டுபிடிப்பு :

2 டிரோன்களிலும் சிறிய வகை ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தனர். அது கீழே விழுந்து வெடித்தது. 2 பேர் காயம் அடைந்தனர்.

ராணுவ மையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவது இதுதான் முதல் தடவை ஆகும். பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த டிரோன்களை இயக்கி, தாக்குதல் நடத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதிகள் பல தடவை காஷ்மீர் பகுதிகளில் டிரோன்களை பறக்க விட்டபடி உள்ளனர். 

இதனால், டிரோன்களை பயன்படுத்தி, தீவிரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திர தின விழா :

இந்நிலையில், டெல்லியில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, டெல்லி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

ஆகஸ்டு 15-ந் தேதி டெல்லியில் மத்திய அரசு சார்பில், சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறும். அதில், பிரதமர் மோடி கொடி ஏற்றுவார்.

சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

உளவு நிறுவனம் எச்சரிக்கை :

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரம் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. எனவே, வருகிற ஆகஸ்டு 5-ந் தேதி டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக, உளவு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆகஸ்டு 15-ந்தேதிக்கு முன்னதாக எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால், இப்போதே முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, டெல்லியில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். 

ஆளில்லா பறக்கும் சாதனங்கள், டிரோன், ரிமோட் கன்ட்ரோல் ஏர்கிராப்ட், பாரா ஜம்பிங், ஹாட் ஏர் பலூன் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this story