பூனைகளால்  சிங்கங்களுக்கு பாதிப்பா? : தொடரும் ஆய்வுகள்..

By 
Can cats harm lions  Continuing studies ..

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 9 சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், நீலா என்ற பெண் சிங்கம் நோய் பாதிப்பால் இறந்துபோனது.

இதையடுத்து, பூங்காவில் உள்ள மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்தனர். இதில், மேலும் 2 சிங்கங்களுக்கு சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது, அந்த 2 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அதனை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஆய்வு :

இதேபோல், மற்ற விலங்குகளுக்கும் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியவும் பணி நடந்து வருகிறது. இதற்காக சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகளின் சளி மாதிரிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே ‘கெனைன் டிஸ்டம்பர்’ வைரசால் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியும், அதனை உறுதி செய்யவும் மீண்டும் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இதற்கிடையே, வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு நோய் தொற்று எப்படி பரவியது என்று இன்னும் தெரியவில்லை. இதுபற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.

எனினும், கைவிடப்பட்ட தெரு பூனைகள் அதிக அளவில் பூங்காவுக்குள் சுற்றி வருகின்றன. இதன் மூலம் சிங்கங்களுக்கு நோய் தொற்று பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, பூங்காவுக்குள் சுற்றும் தெரு பூனைகளை பிடிக்கும் பணியும் நடந்து வருகிறது. 

அதிக வாய்ப்பு :

இது தொடர்பாக, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர் ஒருவர் கூறும்போது, ‘சார்ஸ் கோவிட்-2 வைரசை சிங்கங்கள் மற்றும் பிற விலங்குகளுக்கு பூனைகள் பரப்ப அதிக வாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

சரியான காரணம் :

இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'தெரு பூனைகள் மூலம், சிங்கங்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

ஆனால், இதுவரை சரியான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. எனினும் பூங்கா வளாகத்துக்குள் இருக்கும் பூனைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது' என்றார்.

Share this story