கோர்ட்டுக்குள் பிரபல ரவுடி சுட்டுக்கொலை : 2 பேர் கைது
 

Celebrity rowdy shooting inside court 2 arrested

டெல்லியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் ஜிதேந்திரா என்ற கோகி. 

ஆறரை லட்சம் பரிசு :

தலைநகரில், ஏராளமான வழக்குகளில் தொடர்புடைய இவரது தலைக்கு போலீசார் ரூ.6½ லட்சம் பரிசு அறிவித்து இருந்தனர்.

டெல்லியில் தேடப்பட்டு வந்த மிக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான கோகி, கடந்த மார்ச் மாதம் குருகிராமில் வைத்து கூட்டாளிகள் இருவருடன் போலீசில் சிக்கினார். அவரை டெல்லி சிறப்பு போலீசார் கைது செய்திருந்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை டெல்லி ரோகிணி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்குகளின் விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக, அவரை நேற்று கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து வந்தனர். 

பயங்கர ரவுடி என்பதாலும், எதிர்க்கோஷ்டியினரால் அவரது உயிருக்கு ஆபத்து இருந்ததாலும், டெல்லி சிறப்பு போலீஸ் படை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

40 ரவுண்டுகள் :

பின்னர், கோர்ட்டு எண் 2-ல் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது.

அப்போது வக்கீல் உடையில் திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இருவர் ரவுடி ஜிதேந்திராவை நோக்கி, துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக சுதாரித்துக்கொண்டு அந்த கொலையாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே சில நிமிடங்கள் துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இரு தரப்பினரும் சுமார் 40 ரவுண்டுகள் வரை துப்பாக்கியால் சுட்டனர். இறுதியில் கொலையாளிகள் இருவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த கோர்ட்டுக்குள்ளே திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

உமாங்-வினய் :

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு இருவரை கைது செய்துள்ளது.

உமாங், வினய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வடமேற்கு டெல்லி ஹைதர்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற ரோஹிணி நீதிமன்றத்தின் நான்காவது வாயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story