நிலவை நெருங்குகிறது சந்திரயான்-3 : இஸ்ரோ அறிவிப்பு

By 
isro2

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.

முதலில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 5-ந்தேதி நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் நுழைந்தது. அதிகபட்சமாக சுமார் 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நீள் வட்ட பாதையில் முதலில் சுற்றியது. நிலவின் ஈர்ப்பு விசையை நெருங்கிய போது விண்கலத்தின் உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து படிப்படியாக நிலவின் மேற்பரப்பில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் இருக்கும் உயரம் குறைக்கப்பட்டது. 6-ந்தேதி 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 4,313 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது. பின்னர் 9-ந்தேதி 1,433 கி.மீட்டராகவும், 14-ந்தேதி 177 கி.மீட்டராகவும் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் குறைக்கப்பட்டது.

3-வது கட்ட உயரம் குறைப்பின் போது விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 150x177 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. அதாவது குறைந்தபட்சம் 150 கி.மீ. தொலைவும் அதிகபட்சம் 177 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவு வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இந்த நிலையில் இந்த தூரத்தை மேலும் குறைத்து நிலவுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரயான்-3 விண்கலத்தை நிலைநிறுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.

இதில் 4-ம் கட்டமாக சுற்றுப் பாதை குறைப்பு பணியை இன்று தொடங்க திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று காலை 8.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை 100 கிலோ மீட்டராக குறைக்கும் பணி தொடங்கியது. இப்பணி வெற்றிகரமாக நடந்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் சுற்று வட்டப் பாதையில் 153 கி.மீx163 கி.மீ. தொலைவில் விண்கலம் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இன்று நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் குறைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது. விண்கலம் 153 கி.மீ. x 163 கி.மீ. சுற்று வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

இத்துடன் நிலவை சுற்றும் நிகழ்வு நிறைவடைகின்றன. ப்ராபல்ஷன் மாட்யூல் (உந்துவிசை கலன்) மற்றும் லேண்டர் மாட்யூல் ஆகியன தனித்தனி பயணங்களுக்கு தயாராகுவதற்கான நேரம் இது. ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டரை பிரிப்பு நிகழ்வை நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. உயர குறைப்பின் முயற்சியின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் பிரிக்கப்படும்.

அதன்பின் லேண்டர் நிலவை நோக்கி பயணிக்கும். நிலவின் மேற்பரப்பில் இருந்து லேண்டரின் உயரம் 30 கிலோ மீட்டராக வருகிற 20-ந்தேதி குறைக்கப்படும். சந்திரயான்-3 விண்கலம் பயணம் முக்கிய கட்டத்தில் இருக்கிறது. இந்த பயணத்தில் முக்கிய நிகழ்வான உந்து விசை கலனில் இருந்து லேண்டர் தனியாக பிரிப்பதை நாளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். உந்துவிசை கலனில் இருந்து லேண்டரை பிரிப்பதற்கான சாதகமான சூழல், செயல்பாடு உள்ளதா? என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து விழிப்புடன் கண்காணிக்கிறார்கள்.

சந்திரயான்-3 விண்கலம் 33 நாட்களாக தனது நிலவின் பயணத்தை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி 40 நாட்கள் பயணத்துக்கு பிறகு வருகிற 23-ந்தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை லேண்டர் பிரியும் நிகழ்வையும், 23-ந்தேதி நிலவில் விண்கலம் தரையிறங்குவதையும் இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

நிலவின் தென்துருவத்தை அடைவதற்கு பல நாடுகள் முயற்சி செய்து வருகிறது. நிலவின் வட துருவத்தைவிட தென் துருவத்தில் இறங்குவது மிகவும் சவாலான ஒன்று. இதனாலேயே, பல நாடுகள் இதனை கைவிட்டு விட்டன. சூரிய குடும்பம் உருவான போது, தென் துருவத்தில் காந்தக்குவியல்கள் உருவாகின. இதனால் தென் துருவ ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

நிலவு உருவானபோது என்ன இருந்ததோ அதெல்லாம் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதன் மூலம் பூமி எப்படி உருவானது? மனிதர்கள் எப்படி உருவானார்கள்? என நாம் அறியாத , நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அதுபோல், நிலவின் ரசாயனம், மண், நீர் போன்றவைகளையும் ஆய்வு செய்ய முடியும். எந்த ஒரு நாடும் தென் துருவம் வரை விண்கலத்தை அனுப்பியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Share this story