சந்திரயான்-3, திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குகிறது : இஸ்ரோ தகவல்

By 
chan3

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரஷியா நிலவுக்கு அனுப்பிய லூனா-25 விண்கலம் தரையிறங்க முடியாமல் நொறுங்கியது அனைவருக்கும் அதிர்ச்சி தரலாம். சர்வதேச விண்வெளி துறையில் மிகுந்த அனுபவம் உடைய தேசம் எப்படி தோல்வியை தழுவியது என்று பலர் நினைக்கலாம். ஆனால் உண்மையில் நிலாவில் உள்ள களநிலவரம் மிகவும் சவாலானது.

சந்திரயான்-2 விண்கலத்துக்கு ஏற்பட்ட அதேகதி தான், லூனா-25 விண்கல த்துக்கு ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முன்பாக வேகத்தை குறைக்க வேண்டியது அவசியம். அப்போது உயரமும் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். நிலவின் சமவெளி பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மலைமுகடு போல இருக்கும்.

இத்தகைய சூழ்நிலையில் அங்கு விண்கலத்தை தரையிறக்கும் போது கரடுமுரடான இடங்களில் சிக்கி அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு உண்டு. ரஷியாவின் லூனா-25 விண்கலத்துக்கு அந்நிலையில் தான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். அந்த நாட்டின் 14 ஆண்டுகால உழைப்பு நொடிப்பொழுதில் கானல் நீரானது மிகவும் வருத்தம் தருகிறது.

நாம் இதுவரை பார்த்திராத இடத்தில், ஒரு சவாலான காரியத்தை மேற்கொள்ளப் போகிறோம். லூனா-25 விண்கலத்தின் வேகத்தை குறைக்கும்போது ரஷியாவுக்கு பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் நாம் சந்திரயான்-3 விண்கலத்தின் வேகத்தை 2 நாட்களுக்கு முன்பே குறைத்து வெற்றிகரமாக இயக்கி வருகிறோம். சந்திரயான்-2 உடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் உடன், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருக்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இப்போது வரை நடப்பது எல்லாமே இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இதனால் உலக நாடுகளிடம் சந்திரயான்-3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Share this story