விமான நிலையத்திற்கு, சென்னை பெண் வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு படையினரின் அதிரடி சோதனையால் பரபரப்பு..

By 
atat

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா,  துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும்,  சென்னை, புதுடெல்லி உள்ளிட்ட  நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை திருச்சி விமான நிலைய மேலாளர் வாட்ஸ்அப் எண்ணிற்கு  தகவல் வந்தது. அந்த குறுஞ்செய்தியில் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் கொண்டு வருவதாகவும், சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும், உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என  குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு மேலாளர் தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமான நிலையம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை  மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. 

இதனை தொடர்ந்து வாட்சப்பில் வந்த எண்ணை வைத்து விசாரணை மேற்கண்டபோது சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண்மணியின் செல்போன் எனவும், இவரது செல்போனை பயன்படுத்தி வாட்சப் மெசேஜ் அனுப்பிய சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

எனவே, அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Share this story