அறிவிப்பை நிறுத்திவைக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தின் விவரம் வருமாறு: தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினைப் பற்றி தங்களின் கனிவான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அந்த அறிக்கையின்படி, இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில உரிமைகள் மீதான நேரடி ஆக்கிரமிப்பு ஆகும்.
மேலும் பொது சுகாதாரத் துறையிலும், பொது சுகாதார கட்டமைப்பிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் பல ஆண்டுகளாகவே பொது சுகாதாரத் துறையை மேம்படுத்தி வருகிறது. அதனால் தான் இங்கே மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருக்கிறது. சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்றளவுக்கு உயர்ந்துள்ளது.
பொதுத் துறை மட்டுமல்லாது தனியார் துறையிலும், நமது தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநில மக்களுக்கும் சிறந்த மருத்துவத்தை தருகின்றனர். இதனால் தரமான சுகாதார சேவைகளுக்கான தேவை தமிழகத்தில் மென்மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் மிகமிக அவசியம். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இவை அமைக்கப்பட வேண்டும்.மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ இடங்கள் என்று நிபந்தனை விதிப்பது பொருத்தமானதாக இல்லை.
மேலும், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. மருத்துவர் - மக்கள் விகித்தாரம் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார்கள். தமிழகத்தில் போதுமான அளவு மருத்துவர் - மக்கள் விகிதாச்சாரம் இருந்தாலும் கூட சில மாவட்டங்களில் மருத்துவர் - மக்கள் விகிதாச்சாரத்தில் பற்றாக்குறை இருக்கத்தானே செய்கிறது. இந்தப் பிரச்சினைக்கு பின் தங்கிய பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதே தீர்வாக இருக்க முடியும். புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மாநில நிலவரங்களைக் கொண்டு தடை விதிப்பது தேவையுள்ள மாவட்டங்களுக்கு அநீதி இழைப்பதாகிவிடும்.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.