சிலிண்டர் விலை மேலும் உயர்வு : இல்லத்தரசிகள் பெரும்கவலை..

By 
Cylinder price hike Housewives worried

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அதன் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி இருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 ரூபாயையும் தாண்டியுள்ளது.

ரூ. 25 உயர்வு :

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது வழக்கம். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

பிப்ரவரி 4-ந்தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15-ந் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. பிப்ரவரி 25-ந்தேதி மறுபடியும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அடுத்து மார்ச் மாதம் 1-ந்தேதி 25 ரூபாய் உயர்த்தினார்கள்.

இவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் 125 ரூபாய் விலை உயர்த்தினார்கள். ஏப்ரல் 1-ந்தேதி சிலிண்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சமையல் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 3 மாதத்திற்கு பிறகு எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.

பெரும் கவலை :

14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.25.50 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.825ஆக இருந்தது. ரூ.25.50 காசு உயர்த்தப்பட்டு இருப்பதால், ரூ.850.50 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல, 19 கிலோ கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கு ரூ.84.50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதன் விலை ரூ.1603ஆக இருந்தது. இப்போது ரூ.1685.50ஆக உயர்ந்து உள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதற்கு முன்பு, சமையல் எரிவாயுக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்பட்டு வந்தது. சமீபகாலமாக மானியமும் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

Share this story