தீபாவளி சிறப்பு ரயில்கள் : டிக்கெட் கட்டணம் உயர்வு

By 
Deepavali special trains Ticket fare hike

தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே நெல்லை, நாகர்கோவிலுக்கு 3 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. 

இந்த சிறப்பு ரயில்கள் எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

டிக்கெட் கட்டணம் :

தீபாவளி சிறப்பு ரயில்களில் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழக்கமாக ரூ.395 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், சிறப்பு ரயிலில் ரூ.535 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.140 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் எடுக்க ரூ.15 சேவை கட்டணமும் செலுத்த வேண்டும்.

எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சூப்பர் பாஸ்ட் கட்டணம் ரூ.395. எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூ.365 ஆகும். 

ஆனால், தாம்பரம்-நெல்லை தீபாவளி சிறப்பு ரயிலில் ரூ.495 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.130 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

அறிவிக்கப்பட்ட 3 சிறப்பு ரயில்களிலும் சிறப்புக் கட்டணம் என்ற பெயரில், பொதுமக்களிடம் கூடுதலாக ரயில்வே துறை வசூலிக்கின்றது. அரசு பஸ்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட, சற்று கூடுதலாக சிறப்பு ரயில்களின் கட்டணம் உள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

முன்பதிவு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் 2 சிறப்பு ரயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.

06037 எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை (3-ந்தேதி) இரவு 10.05 மணிக்கு புறப்படுகிறது. 

இந்த ரயிலில் முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை இடங்கள் மட்டுமே உள்ளன. 

காத்திருப்போர் பட்டியல் :

2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துள்ளது.

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப வசதியாக, 7-ந்தேதி திருநெல்வேலியில் இருந்து, 06040 சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. 

இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

இந்த ரயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பிய நிலையில் 3-ம் வகுப்பு ஏசி படுக்கைகள் 50 மட்டும் காலியாக உள்ளன. 

இந்த ரயிலில், ஏசி 3-ம் வகுப்பு கட்டணம் ரூ.1340, 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.1905, 2-ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் இருக்கை கட்டணம் ரூ.245 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து 8-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செல்லும் சிறப்பு ரயிலில் அனைத்து வகுப்புகளும் காலியாக உள்ளன.
*

Share this story