ரூ.17,600 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்; இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

By 
raj22

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.17,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 

பிரதமர் மோடி 5-ம் தேதி (இன்று) மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சாலை, ரயில், காஸ் பைப்லைன், வீட்டுவசதி மற்றும் குடிநீர் உட்பட ரூ.12,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் ஒரு பகுதியாக பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் (நகர்ப்புறம்) ரூ.128 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதுபோல ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு பிரதமர் மோடி 5-ம் தேதி (இன்று) பயணம் மேற்கொள்கிறார். அங்கு, சில வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் மேலும் சில திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி ஆகும்.

குறிப்பாக ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் வளாகத்தில் 350 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுக்கு பிரதமர் அடிக் கல் நாட்டுகிறார். இதுபோல ராஜஸதான் மாநிலம் முழுவதும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 7 அவசர சிகிச்சை மையங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story