தமிழகத்தில், கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் : ஆய்வு மையம் தகவல்

By 
Districts prone to heavy rains in Tamil Nadu

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. 

இன்றும் நாளையும் :

இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேவேளை, நாளை (நவ. 25) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை :

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் (நவ. 25, 26) சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this story