விஏஓ-வை லாரி ஏற்றிக்கொல்ல முயற்சி: திமுக கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது..

By 
vao1

லாரியை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் நோக்கி லாரிகள் முன்னால் செல்ல பின்னால் விஏஓ உதவியாளர் சென்று கொண்டிருக்கும்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் விஏஓ மீது வாகனத்தை ஏற்றுவது போலவும் வலது புறமும் இடது புறமும் சினிமா காட்சிகள் போல் வாகனத்திற்கு வழிவிடாமல் இயக்கியுள்ளார்.  

பழனி அருகே மண் அள்ளியதை தடுத்து நிறுத்திய விஏஓ மற்றும் உதவியாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர், திமுக கவுன்சிலரின் கணவர்  உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னிமலை சித்தன் கரடு பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன் அனுமதியின்றி மண் அள்ளி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி அவருடைய உதவியாளர் மகுடீஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வேறு ஒரு இடத்திற்கான நடை சீட்டை பயன்படுத்தி மண் அள்ளியது தெரியவந்ததை அடுத்து லாரிகளை காவல் நிலையத்திற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.

லாரியை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் நோக்கி லாரிகள் முன்னால் செல்ல பின்னால் விஏஓ உதவியாளர் சென்று கொண்டிருக்கும்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் விஏஓ மீது வாகனத்தை ஏற்றுவது போலவும் வலது புறமும் இடது புறமும் சினிமா காட்சிகள் போல் வாகனத்திற்கு வழிவிடாமல் இயக்கியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த விஏஓ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீதும்  மண் அள்ளிய நபர்கள் லாரிகளை மோதுவது போல் சென்றுள்ளனர். 

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் தனது கண்டம் தெரிவித்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து விஏஓ சங்கத்தினர் இவர்களை கைது செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வேண்டுமென  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 4 நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில் பாலசமுத்திரம் திமுக கவுன்சிலர் ரமேஷ் அவரது தந்தை சக்திவேல், காளிமுத்து திமுக கவுன்சிலரின் கணவர் பாஸ்கரன் உள்ளிட்டவர்களை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

 

Share this story