திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஜி.கே.மூப்பனார் நினைவு நாளையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேர்மையான அரசியலை அறவழியில் நடத்தி வருகிறார். 2024 தேர்தலுக்கு பிறகு அவரும் மிகப்பெரிய பொறுப்புக்கு வரவேண்டும் என்பது எங்கள் ஆசை. அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கதுறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இனி அவருக்கு ஜாமீன் கொடுப்பது குற்றப்பத்திரிகை ஆவணங்களின் அடிப்படையில்தான் இருக்கும்.
ஏனெனில் அதே அடிப்படையில்தான் டெல்லி மந்திரிகளும் உள்ளே இருக்கிறார்கள். எனவே பெயில் கிடைப்பது என்னை பொறுத்த வரை சாத்தியம் இல்லாதது. மத்திய அரசு கியாஸ் விலையை குறைத்திருப்பதை அரசியல் என்கிறார்கள். கடந்த தீபாவளிக்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 மத்திய அரசு குறைத்தது. எல்லா காலகட்டங்களிலும் மத்திய அரசு தேவையானவற்றுக்கு தேவையான நேரங்களில் மானியங்களை வழங்கிதான் வருகிறது.
இப்போதும் யூரியாவுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.2 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதுவும் அரசியலா? தி.மு.க.தான் தேர்தலுக்கு முன்பு கியாஸ் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா அரசு மீது ரபேல் போர் விமான ஊழல் என்று காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது. தேர்தலில் அவர்களுக்கு எப்படிப்பட்ட தோல்வியை மக்கள் வழங்கினார்கள் என்பதை நாடே பார்த்தது.
இப்போதும் சி.ஏ.ஜி. அறிக்கையை மேற்கோள்காட்டி தி.மு.க. தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. வருகிற தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரசை போல் படுதோல்வியை சந்திக்கும். சி.ஏ.ஜி. அறிக்கையில் எந்த இடத்திலும் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படவில்லை. சில திட்டங்களை மாற்றி அமைத்ததன் மூலம் செலவினங்கள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது. சென்னை-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு இந்தியாவிலேயே அதிகமான செலவு ஆகிறது. இதற்கு யார் என்ன செய்யமுடியும்?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதுவும் புரிவதில்லை. புரியாமலேயே குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஓருவேளை அவரது ஆட்சியில் நடைபெற்றுவரும் ஊழல்களை பற்றி அவர் தெரியாமல் பேசியிருக்கலாம். நான் தென் மாவட்டங்களில் 41 தொகுதிகளில் நடைபயணம் சென்றிருக்கிறேன். தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
நிச்சயமாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கோபம் வெளிப்படும். இந்தியா மாறி வருகிறது. அது புரியாமல் கி.வீரமணி போன்றவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஸ்வகர்மா திட்டத்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கிறது. அப்படி கொடுப்பதை கூட தடுக்கும் மனம் படைத்தவர்கள்தான் இந்த திராவிட மாடல் கட்சியினர். இவ்வாறு அவர் கூறினார்.