நிலநடுக்கம் : 20 பேர் பரிதாப மரணம்

At least 20 dead in Pakistan earthquake

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. 

இதன் தலைநகரம் குயட்டாவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் ஹர்னாய் என்ற நகரம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3.20 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஹர்னாயில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இதன் மையப்புள்ளி இருந்தது. ரிக்டர் அளவில் 5.9 ஆக நிலநடுக்கம் பதிவானது.

இதனால் ஹர்னாய், தலைநகரம் குயட்டா, சிபி, பிசைன், குய்லா சாய்புல்லா, ஜமான், ஷியார், ஷாப் உள்ளிட்ட பகுதிகள் பயங்கரமாக குலுங்கியது. இதில் வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த பகுதியில் பெரும்பாலும் மண்ணால் வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை தாங்க முடியாமல் அவை இடிந்து விழுந்தன.

அதிகாலை நேரம் என்பதால், பெரும்பாலான மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் மீது இடிபாடுகள் விழுந்தன. அவற்றில் சிக்கி பலரும் உயிரிழந்தார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். 

இதுவரை வந்துள்ள தகவல்களின்படி, 20 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 300 பேர் காயமடைந்து இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதி ஏராளமான குக்கிராமங்களைக் கொண்டதாகும். 

மேலும், அந்த பகுதியில் பாலைவனமும், சிறிய குன்றுகளும் அமைந்துள்ளன.

இதனால், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதியாக அது உள்ளது. எனவே, கிராமங்களில் இருந்து இன்னும் சரியான தகவல்கள் வரவில்லை. 

இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.

ஹர்னாய் நகரத்தில் மட்டுமே 70 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.  அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் உள்பட 10 உடல்கள் இருப்பதாகவும், 150 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நகரின் துணை கமி‌ஷனர் அன்வர் ஹஸ்மி கூறியுள்ளார்.

Share this story