படிப்பு மட்டும்தான் பறிக்க முடியாத சொத்து : மாணவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 

By 
mt3

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்காக தயார் செய்யப்பட்ட காலை உணவை அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மேலும் அவர்களுக்கு தன் கைப்பட பரிமாறினார். இதையடுத்து விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இன்று வாழ்வின் பொன்னாள். காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து வைத்திருப்பது எனக்கு மன நிறைவை தருகிறது. திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெருமைப்படுகிறேன்.

திருக்குவளையில் உதித்த சூரியன் (கருணாநிதி) இந்தியா முழுவதும் பிரகாசமாக ஒளிர்ந்தது. திருக்குவளையில் கருணாநிதி தொடக்க பள்ளியை படித்து மேல்படிப்புக்காக திருவாரூர் பள்ளியில் சேர்ந்தார். இந்த 2 பள்ளிகள் தான் கருணாநிதியை தலைவராக மாற்றியது. நான் பல திட்டங்களை நிறைவேற்றினாலும் மாணவ செல்வங்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கி வைத்தது மிக மனநிறைவை தருகிறது.

அதுபோல் அரசு பள்ளியில் படித்து முடித்து தற்போது கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, அரசு நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க உள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் ஆகியவற்றால் பெண்கள் பயன் அடைந்துள்ளனர். அதைவிட நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது அதில் கலந்து கொண்ட குழந்தைகள் சோர்வாக காணப்பட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது பலரும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது நிதிசுமை ஏற்படும் என கூறினர். ஆனால் மாணவர்களுக்கு நாம் செய்வது நிதி முதலீடு தான்.

கண்டிப்பாக காலை உணவு திட்டத்தை அமல்படுத்தியாக வேண்டும் என கூறி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 1955-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் தி.மு.க. ஆட்சியிலும் அந்த திட்டம் தொடர்ந்தது. 1971-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மதிய உணவு திட்டம் செழுமைப்படுத்தப்பட்டு குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டன.

எம்.ஜி.ஆருக்கு பிறகு 1989-ம் ஆண்டு ஆட்சி நடத்திய கருணாநிதி மதிய உணவில் முட்டைகள், கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களையும் சேர்த்து வழங்கினார். பின்னர் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும் மதிய உணவில் கலவை சாதம் திட்டத்தை அமல்படுத்தினார். இப்படி கடந்த 2021-ம் ஆண்டு வரை பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தான் இருந்தது. ஆனால் அதற் பிறகு எனது தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தான் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பெரியார், அண்ணா, கருணாநிதி வகுத்த கோட்பாட்டின் படி சமூக நீதி ஆட்சி நடத்தி வருகிறோம். இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு தான். தற்போது நீட் தேர்வு மூலம் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு படிப்பு மட்டும் தான் பறிக்க முடியாத சொத்து என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும்.

எதை பற்றியும் கவலை கொள்ளாமல் படியுங்கள். நிலவுக்கு விண்கலம் அனுப்பி சாதனை படைத்த விஞ்ஞானிகள் போல் வாழ்க்கையில் உயரத்தை தொட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this story