காங்கிரஸின் ஒவ்வொரு ஊழலும் பல லட்சம் கோடிகள் இருந்தன: பிரதமர் மோடி 

By 
modi25

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அம்மாநிலங்களின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் பிரதமர் மோடி நேரடியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த  வகையில், மத்தியப்பிரதேச மாநிலம் சியோனியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,

காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய சிங் மற்றும் கமல்நாத் ஆகியோர் மத்திய பிரதேசத்தில் தங்கள் மகன்களுக்காக கட்சியை கைப்பற்ற போராடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். “மத்தியப் பிரதேசத்தில் கட்சி அமைப்பை யாருடைய மகன் கைப்பற்றுவது என்பதில் காங்கிரஸின் பெரிய தலைவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” என்று அவர் கூறினார்.

ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி செய்தாலும் பழங்குடியினர் நலனில் அக்கறை காட்டாத கட்சி காங்கிரஸ் என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “2014ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸின் ஒவ்வொரு ஊழலும் பல லட்சம் கோடிகள் இருந்தன. இப்போது பாஜக ஆட்சியில் ஊழல்கள் இல்லை.

ஏழைகளின் உரிமைகளுக்காக நாம் சேமித்த பணம் இப்போது ஏழைகளின் ரேஷனுக்குச் செலவிடப்படுகிறது. ஊழல்வாதி காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான்.

நான் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி, எனவே இதைப் பற்றி புத்தகங்களில் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏழைகளின் வலி எனக்குப் புரியும். வருகிற டிசம்பர் மாதம் நிறைவடையும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிக்கப்படவுள்ளது, அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கப்படும்.” என்றார். சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட போதும், இதே வாக்குறுதியை அவர் அளித்தார்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்கவைப்பதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கணித்த பிரதமர் மோடி, வெறும் 5-10 பேரை வைத்து கணக்கீடுகள் செய்து முடிவெடுக்கும் அரசியல்வாதிகளின் குழுவை விமர்சித்ததுடன், தேர்தல் முடிவுகள் தெளிவாக உள்ளது என்றும் கூறினார்.

முன்னதாக, சத்தீஸ்கரில் உள்ள ஜெயின் ஆலயத்தில் திகம்பர ஜெயின் ஆச்சார்யா ஸ்ரீ வித்யாசாகர் ஜி மகராஜிடம் பிரதமர் மோடி இன்று ஆசி பெற்றார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சத்தீஸ்கரின் டோங்கர்கரில் உள்ள சந்திரகிரி ஜெயின் மந்திரில் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி-யின் ஆசீர்வாதத்தைப் பெற்றதன் மூலம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நபராக உணர்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.

Share this story