அரியலூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 11 பேர் உடல் சிதறி பரிதாப பலி..

By 
ari11

கீழப்பழுவூர் அருகே வெற்றியூரில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியலூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் பட்டாசு குடோன்களிலும் வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வானவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

சனிக்கிழமையன்று ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. அந்த சோகம் மறைவதற்குள்ளாக அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

 

Share this story