பட்டாசு கடை விபத்து: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சோகம்..

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் தீர்த்தமலை அருகே உள்ள வேட கட்டமடுவு ஊராட்சி,டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 9 நபர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள அத்திப்பள்ளியில் உள்ள தனியார் பட்டாசு கடைகள் வேலை செய்து வந்தனர்.
சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சிக்கி டி அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் உயிரிழந்தனர். இரண்டு நபர்கள் காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் விவரம் வருமாறு வேடப்பன் (21 ) இவர் ஒருவர் மட்டுமே திருமணமானவர், ஆதிகேசவன்(18), சச்சின் என்கின்ற முனிவேல் ( 20), இளம்பருதி (19), விஜயராகவன் (19),ஆகாஷ் (18) கிரி (18). ஒரே கிராமத்தினைச் சேர்ந்த 7 பேர் விபத்தில் இறந்ததால் கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இவர்களுடன் வேலைக்கு சென்ற ,அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நீப்பத்துறை சேர்ந்த பிரகாஷ்(18) பலியாகியுள்ளார்.விபத்தில் உயிரிழந்த அனைவரும் கல்லுாரி மற்றும் பள்ளி பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பீமாராவ்(20), லோகேஷ்(21) சிறிய அளவில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.