சுப்ரீம் கோர்டுக்கு முதல்முறையாக, ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவியேற்பு

By 
For the first time for the Supreme Court, 9 judges were sworn in on the same day

சுப்ரீம் கோர்ட்டில்  நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.

உச்சநீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. 

இந்த மாதத்தில் அடுத்தடுத்து மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமனும், நவீன் சின்காவும் ஓய்வு பெற்றதால், 26 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது. 

பரிந்துரை :

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு  புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிசியம் கடந்த 17-ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது.

சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்கு தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஹீமா கோலி, கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்னா, குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி பேலா திரிவேதி, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அபய் ஓகா, 

குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விக்ரம்நாத், சிக்கிம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி, கேரள ஐகோர்ட்டு நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பி.வி.நரசிம்மா ஆகியோரது பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜீயம் பரிந்துரைத்தது.

இந்த பட்டியலை ஏற்ற  மத்திய சட்ட அமைச்சகம், இதற்கு ஒப்புதல் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. 

உத்தரவு :

இந்த பரிந்துரையை முழுமையாக ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 9 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த 9 நீதிபதிகளுக்கும் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. 

9 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
சுப்ரீம் கோர்ட்  வரலாற்றிலேயே ஒரே நாளில், 9 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல்முறையாகும். 

இந்த நியமனத்தின் மூலம், சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

2027-ம் ஆண்டு :

புதிதாக நியமிக்கப்பட்ட 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான பி.வி.நாகரத்தனா, பணி மூப்பு அடிப்படையில் வரும் 2027-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின்  தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

Share this story