அரசு பேருந்தை சிறை பிடித்த மக்களால் பரபரப்பு..

By 
buss4

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஒன்றியம் கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராமம் சிங்கிலிக்காம்பட்டி. இந்த கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று வருகின்றது. வழக்கம் போல் இன்றும் அக்கிராமத்திற்கு சென்ற அரசுப் பேருந்தை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து கிராம பெண்களிடம் கேட்ட பொழுது, எங்கள் ஊருக்கு வரும் அரசு பேருந்து பெண்கள் ஓசி டிக்கெட் என்று பெண்களை பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும், ஸ்டாப்பில் நிறுத்தாமல் தூரத்தில் நிறுத்துவதால் பெண்கள் ஓடி சென்றாலும் கண்டுகொள்ளாமல் பேருந்தை எடுத்து சென்று விடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், கர்ப்பிணி பெண் பஸ்ஸில் ஏற ஓடிய பொழுது பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டி சென்றதால் கல்தடுக்கி விட்டு கர்ப்பிணி பெண் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த கூம்பூர் உதவி ஆய்வாளர் அரசு பஸ்சை சிறை பிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன் பிறகு இனிமேல் இவ்வாறு தவறுகள் நடக்காது என்று ஓட்டுநர், நடத்துநர் வாக்குறுதி அளித்ததை அடுத்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக பேருந்து புறப்பட்டுச் சென்றது.

Share this story