கனமழைக்கு 25 பேர் பலி : பிரதமர்-முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Heavy rains kill 25 PM announces relief

மும்பையில் கனமழை காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு :

மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. 

மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரங்கல் :

இந்த சூழலில், கனமழை காரணமாக மும்பையில் செம்பூர் மற்றும் விக்ரோலி ஆகிய இடங்களில் வீட்டின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில், 15 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில், மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது. 

கனமழை காரணமாக, செம்பூர் மற்றும் விக்ரோலியில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, இறந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அரசு வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் :

மேலும், மும்பையில் சுவர் இடிந்து விழுந்து உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story