இது எப்டி இருக்கு: அன்று ஜெகன் அரசில் ரோஜாவால் விமர்சிக்கப்பட்ட ரஜினிக்கு, இன்று செம வரவேற்பு..

By 
sandra1

ஒரே வருடத்தில் மாறிய காட்சிகள்... அன்று சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, நடிகை ரோஜா கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதே ஆந்திர மாநிலத்தில் கெத்தாக களம் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். மறைந்த பழம்பெரும் நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா கடந்த ஆண்டு நடைபெற்றது.

விஜயவாடாவில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இவ்விழாவில் ரஜினிகாந்த் தனக்கும் என்.டி.ஆருக்கும் இருந்த பல வருட நட்பை, அன்பை வெளிப்படுத்தி பேசினார்.

சந்திரபாபுவை எனக்கு அறிமுகப்படுத்தியதே என் நண்பர் மோகன்பாபுதான். அன்று முதல் நான் எப்போது ஹைதராபாத் சென்றாலும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவேன்.  அவருடன் பேசும்போது அறிவு தானாக அதிகரிக்கும். அந்த அளவிற்கு அவருடைய பேச்சில் ஏராளமான விஷயங்கள் அடங்கி இருக்கும். சந்திரபாபு அரசியலில் ஒரு தீர்க்கதரிசி.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை என்றாலே என்னவென விழிப்புணர்வு இல்லாத சமயத்தில் அந்த துறை குறித்து புரிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஹைதராபாத் நகரை ஹைடெக் சிட்டியாக மாற்றி ஐடி நிறுவனங்கள் தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார். 

விஷன் 2047 என்ற திட்டத்துடன் 2047 ஆம் ஆண்டு ஆந்திரா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் இப்போதும் சந்திரபாபு நாயுடு அரசியலில் பணியாற்றி வருகிறார் என்றார் ரஜினிகாந்த். இந்த பேச்சை ரசிக்க முடியாத ஆந்திர மாநில அப்போதையை அமைச்சரும், நடிகையுமான ரோஜா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவர் கூறுகையில், "ரஜினிகாந்த் சார் அரசியல் வேண்டாம் என நினைத்து விட்டார்... அவர் வேண்டாம் என விலகிவிட்ட நிலையில், பாலிடிக்ஸ் பற்றி பேசக்கூடாது. 

தெலுங்கானாவில் எல்லோருமே ரஜினிகாந்தை ஒரு சூப்பர் ஸ்டாராகவும், ஒரு நல்ல நடிகராக கொண்டாடுகின்றனர். ஆனால் இவர் பேசியுள்ள விஷயம் தெலுங்கு மக்கள் மற்றும் என்டிஆர் அபிமானிகள் என எல்லோரையுமே கோபப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் மீது ஒரு நடிகராக எனக்கு மரியாதை உள்ளது, ஆனால் அதே நேரத்தில் சந்திரபாபு குறித்து நேற்று அவர் பேசியது சிரிப்பை வரவழைத்தது என தெரிவித்தார். 

இதற்கு அப்போது பதிலடி கொடுத்த சந்திரபாபு,  ஜெகன் கட்சி குறித்து அவர் பேசவில்லை. ஆனால் ஆளும் கட்சியினர் பதவி கர்வத்தால் ரஜினியை விமர்சிக்கின்றனர். ரஜினி ஒரு மாபெரும் நடிகர். அதையும் தாண்டி அவர் நல்ல மனிதர். அவரை தரக்குறைவாக விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இதை தெலுங்கு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் கூறியிருந்தார்.

இந்தநிலையில் தான் அடுத்த ஒரே வருடத்தில் அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று சந்திரபாபு நாயுடு ஆட்சி  அமைக்கிறார். ஆந்திர மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுப்பதிலும் கிங் மேக்கராக சந்திரபாபு நாயுடு உருவாகியுள்ளார்.

இதனிடையே இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார். அன்று ஜெகன் அரசால் விமர்சிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த இன்று சந்திரபாபு நாயுடு அரசால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. 

 

 

 

Share this story