ஆண்டுதோறும் 1 லட்சம் பனைவிதைகள் அளிக்கிறேன் : தமிழக சபாநாயகர் பெருமிதம்

I give 1 lakh palm seeds every year Speaker of Tamil Nadu is proud

கடந்த 14-ந் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

அப்போது 'தமிழ்நாட்டில் பனை மரங்களை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சுனாமியில் சாயாத மரம் :

மேலும் அவர் கூறும்போது, சுனாமி பேரலையின்போது, சாயாத ஒரே மரம் பனை மரம் தான். அதன்படி, தமிழகத்தின் அரசு மரமான பனைமரத்தை அழிவில் இருந்து பாதுகாக்க, தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெறுவது கட்டாயம், கருப்பட்டியை ரே‌ஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பனை மேம்பாட்டு இயக்கம் ரூ. 3 கோடியில் செயல்படுத்தப்படும்' என தெரிவித்தார்.

76 லட்சம் பனைவிதைகள் :

மேலும், தமிழக அரசு பனை மரம் பெருக்கு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனை கன்றுகளையும் முழு மானியத்தொகையுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேளாண்மை துறைக்கான தனிநிதிநிலை அறிவிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக வேளாண்மை துறைக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகளை, தனது சொந்த செலவில் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சபாநாயகர் கூறியபடி அவரது சொந்த செலவில் ஒரு லட்சம் பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான பணகுடி அருகே உள்ள லெப்பைக் குடியிருப்பில் நடைபெற்றது.

அப்போது, தமிழக வேளாண்மைத் துறைக்கு ஒரு லட்சம் பனை விதைகள் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதனை, சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவை சென்னை பூந்தமல்லி செம்மொழி பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பனைமர பெருக்க திட்டம் :

பின்னர், சபாநாயகர் அப்பாவு கூறியதாவது : 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் மீதும், பசுமை காடுகள் வளர்ப்பு உள்ளிட்ட இயற்கை முறைகள் மீது அதிக ஆர்வமாக உள்ளார். 

தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும் ஒன்றுபட்டு, மழை ஈர்ப்பு மையம், நீர் நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் அழிந்து வருகின்றது.

அதனை தடுக்கவும், சிறப்புமிக்க பனை மரங்களை அழிவில் இருந்து காப்பாற்றவும் ஏரிக்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் அதனை வளர்ப்பதற்காக, பனை மர பெருக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதற்காக, ஆண்டுதோறும் 1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு அளிக்கிறேன். தற்போது, 1 லட்சம் பனை மரங்களை கொடுத்துள்ளேன். 

எவ்வளவு பனை விதைகள் தேவை என்றாலும், இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும். எந்த மாவட்டத்திற்கு கேட்டாலும், பனை விதைகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும்' என்றார்.

Share this story