சென்னையில், மேலும் 60,000 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி..

By 
mt1

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவ-மாணவிகள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும், பள்ளி இடைநிற்றலை தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே முதல் கட்டமாக தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவுப்படுத்தும் வகையில் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. தற்போது 38 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் 5220 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. விரிவாக்கம் செய்வதன் மூலம் மொத்தம் 358 பள்ளிகளில் 65,030 மாணவ-மாணவிகள் பயன் அடைய உள்ளனர்.

சென்னை மாநகராட்சியுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் செயல்பட்ட பள்ளிகள் இணைக்கப்பட்டதை தொடர்ந்து பயன்பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 15 மண்டலங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவை தயாரித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு செல்லும் வகையில் 35 இடங்களில் சமையல் கூடம் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது.

53 வழி தடங்களில் புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு காலை 8 மணிக்கு முன்னதாக உணவு வினியோகிக்கப்படும். உணவு தயாரிக்கும் பணியில் அம்மா உணவக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 

Share this story