கேரளாவில், பிரதமர் மோடியுடன் கிறிஸ்தவ பேராயர்கள் சந்திப்பு..

By 
keralav

கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவை நாளை தொடங்கப்படுகிறது. புதிய ரெயில் சேவையை திருவனந்தபுரத்தில் நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று மாலை கொச்சி நகருக்கு வருகிறார்.

கொச்சியில் பாரதிய ஜனதா கட்சியினரின் இளைஞரணி ரோடு ஷோவிலும் கலந்து கொள்கிறார். பின்னர் பாரதிய ஜனதா இளைஞர் அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு கேரளாவில் கிறிஸ்தவ பேராயர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

குறிப்பாக சீரோ மலபார் தேவாலய பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆல ஞ்சேரி, ஆர்த்தடாக்ஸ் ஆலய பேராயர் பசலியோ மார்தோமா மாத்யூ, யாக்கோ பைட் சிரியன் ஆலய பேராயர் ஜோசப் கிரிகோரியஸ், கோட்டயம் கினாயா கத்தோலிக்க தேவாலயம் ஆயர் மேத்யூ முல்லக்காடு, கால்டியன் ஆலய ஆயர் யூஜின் குரியகோஸ், சீரோ மலங்கரா சபை கார்டினால் கிளிமீஸ், லத்தீன் சர்ச் பேராயர் ஜோசப் காளத்திபரம்பில், சிரியன் சர்ச் ஆப் கானான் ஆயர் குரியகோஸ் சேவரியாஸ் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள்.

கேரளாவில் சமீபத்தில் கிறிஸ்தவ பேராயர் ஒருவர் பேசும்போது, கேரள ரப்பர் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றினால் கிறிஸ்தவர்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும், பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கேரளாவில் கணக்கை தொடங்கும் நிலை உருவாகும் எனவும் கூறியிருந்தார்.

இதுபோல இன்னொரு பேராயர் கூறும்போது, பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டதகாத கட்சி இல்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து கடந்த உயிர்ப்பு பெருவிழாவின் போது பாரதிய ஜனதா கட்சியினர் கிறிஸ்தவ மத போதகர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கேரளாவின் கிறிஸ்தவ அமைப்பினர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பேசிவருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரளா வரும் பிரதமர் மோடியை கிறிஸ்தவ பேராயர்கள் சந்திக்க இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Share this story