தமிழகத்தில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் அறிவுறுத்தல்

In Tamil Nadu, heavy rain in 8 districts today Weather Center instruction

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று (அக்.9) நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை :

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

மழை அளவை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கரூர், அகரம் சீகூர் (பெரம்பலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) ஆகிய இடங்களில் தலா 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (அக்.10) ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

அறிவுறுத்தல் :

தெங்கு வங்ககடல் பகுதியில் இன்று (அக்.9) சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் (அக்.10,11) பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகளில் இன்று முதல் 11-ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீழக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this story