தமிழகத்தில், ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தல்? : தேர்தல் ஆணையம் ஏற்பாடு..

By 
In Tamil Nadu, local elections in August  Organized by the Election Commission

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள், தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். இதே போல் ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்தனர்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்வானவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர்.

விடுபட்ட 9 மாவட்டங்கள் :

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாமல் இருந்ததால், அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது.

இந்நிலையில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

தேர்தல் ஆணையம் :

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 22-ந்தேதி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், 'இனி கால அவகாசம் தர முடியாது. செப்டம்பர் 15-ந்தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது.

வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக இப்போதே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் முடிவடைய அநேகமாக ஒரு மாத காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக சட்டசபை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம். 

ஆகஸ்ட் மாதம் :

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும், ஆகஸ்டு மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இப்போதே தயாராகி வருகின்றனர்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள், அந்தந்த மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு இப்போதே தங்களுக்கு சீட் கிடைக்க பேசி வருகிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்தான் தலைமைக்கு பட்டியல் கொடுத்து விட்டு வேட்பாளரை அறிவிப்பார்.

இதேபோல், காங்கிரஸ் கட்சியில் அந்தந்த மாவட்ட தலைவர்கள் பட்டியல் தயார் செய்து மாநில தலைவருக்கு பரிந்துரை செய்வார்கள். அதன் அடிப்படையில் சீட் கிடைக்கும்.

இதேபோல், ஒவ்வொரு கட்சியிலும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் வேட்பாளர்களை முடிவு செய்வார்கள். இதனால், ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*

Share this story