தமிழகத்தில், செப்.1-ந்தேதி பள்ளிகள் திறப்பு : விதிமுறைகள்..
 

By 
In Tamil Nadu, schools will reopen on September 1.

தமிழ்நாட்டில், இப்போது ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் நோய்த் தொற்று மிகவும் குறைந்து விட்டது.

பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க எண்களில் பாதிப்பு உள்ளது. எனவே, பள்ளிகளை திறக்க அரசு தயாராகி வருகிறது.

இது சம்பந்தமாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், நிபுணர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.

அப்போது பள்ளிக்கூடங்களை எப்போது திறப்பது? என்னென்ன வழிமுறைகளை கையாள்வது என்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

செப்டம்பர் 1-ந்தேதி :

முதலாவதாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். 

அதே நேரத்தில் மீண்டும் நோய் தொற்று பரவிவிடாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர்.

இதற்காக செயல்பாட்டு வழிமுறைகளை தயாரித்து வருகிறார்கள். பள்ளி வகுப்புகளுக்கு பாதியளவு மாணவர்கள் மட்டுமே வரும் வகையில் வகுப்புகள் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதாவது ஒற்றைப்படை எண் உள்ளவர்கள் ஒரு நாளும், இரட்டை படை எண் உள்ளவர்கள் மறுநாளும் வகுப்புக்கு வரும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன்படி, சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.

அதேபோல கழிவறையிலும், வராண்டா பகுதியிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் குவிந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வகுப்பின் தொடக்கம் மற்றும் முடிவு நேரங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.

விதிமுறைகள் :

இடைப்பட்ட ஓய்வுநேரமும் வகுப்புகளுக்கு தகுந்த மாதிரி மாற்றம் செய்யப்படுகிறது. 

வகுப்பறையில் இருக்கைகளும், சமூக இடைவெளியை பின்பற்றி அமைக்கப்படும். ஒரு பெஞ்சில் 2 அல்லது 3 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. உணவை பரிமாறிக் கொள்ளக் கூடாது என்றும் விதிமுறைகள் வகுக்கப்படுகிறது.

பள்ளி வாசலிலேயே அனைத்து மாணவர்களுக்கும் தெர்மல் கருவி மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்படும். மேலும் சானிடைசர்கள் கைகளில் தெளிக்கப்படும். இத்துடன் பள்ளி வாசலிலேயே கைகழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

பள்ளிகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். வகுப்பு அறைகளிலும் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.

நீண்ட காலமாக பள்ளிகள் திறக்காமல் ஆன்லைனிலேயே பாடங்களை கற்றுக்கொண்டதால் ஒருவித மனஅழுத்தத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். 

இந்த மனஅழுத்தத்தை போக்கும் வகையில் உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவையும் நடத்தப்பட இருக்கிறது.

ஆன்லைன் வகுப்பு :

ஆன்லைனில் கற்றப்பாடங்கள் ஓரளவுதான் மாணவர்களுக்கு உதவியாக இருந்து இருக்கும். எனவே ஏற்கனவே நடத்தப்பட்ட பாடங்களில் முக்கிய அம்சங்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனா ஏற்பட்டபோது, ஒவ்வொரு வகுப்புக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. அதேபோல, இப்போதும் குறிப்பிட்ட பாடங்களை குறைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அனைத்து பள்ளிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருத்துவ அதிகாரி ஆகியவற்றின் போன் எண்களை வைத்திருக்க வேண்டும். 

மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் உடனே ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு சிகிச்சை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இதன் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் செயல்பாட்டு வழிமுறைகள் இன்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட இருக்கின்றன. 

அதன்பிறகு, இந்த வழிகாட்டு முறைகள் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதை பின்பற்றி பள்ளிக்கூடங்கள் செயல்பட வேண்டும்.

கல்லூரிகளில், இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

பள்ளிகள் திறப்பை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

Share this story