'ஜெயலலிதா பல்கலை' விவகாரம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
 

By 
'Jayalalithaa University' affair Edappadi Palanisamy accused

சட்டசபையில்  உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. 

அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் விவகாரத்தில், திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் புகார் தெரிவித்திருந்தார்.

காழ்ப்புணர்ச்சி கிடையாது :
   
இதுதொடர்பாக சட்டசபையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, 'ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். 

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. அப்படி இருந்திருந்தால், அம்மா உணவகம் இருந்திருக்காது. இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது' என்று தெரிவித்தார். 

இதுதொடர்பாக, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'பெயர் வைக்கவேண்டும் என்பதற்காகவே, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. 

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில் தான் தொடர்ந்து இயங்கி வருகிறது' என்றார்.

வெளிநடப்பு :

இதனைத்தொடர்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

கல்வியில் புரட்சி :

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தொடர்ந்து செயல்பட வலியுறுத்தியும், தொடராது என அறிவித்ததால் வெளிநடப்பு செய்துள்ளோம். 

ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படுகிறது. 

கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியவர் ஜெயலலிதா அவர்கள். 

கல்வியில் புரட்சி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவரின் பெயர் இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாததால், அந்த பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கிறார்கள்' என்று குற்றம் சாட்டினார்.

Share this story