ஜூலை 18-ந்தேதி 'தமிழ்நாடு தினம்' ஆக கொண்டாடப்படும்.. விரைவில் அரசாணை..

July 18 will be celebrated as 'Tamil Nadu Day' .. Government soon ..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.

2019 முதல் நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1-ம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவு கூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், 

மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி, பேரறிஞர் அண்ணா 1968-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து, தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினையே தமிழ்நாடு நாளாக, இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில், நவம்பர் 1-ம் நாளை எல்லைப்போராட்டத் தியாகிகளை கவுரவிக்கும் வகையில், 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு, சிறைச்சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது.

தற்போது, எல்லைக் காவலர்கள் மொத்தம் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 5,500 மருத்துவப்படியாக ரூ. 500 வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், எல்லைக்காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3000 மருத்துவப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. 

எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று தியாகம் செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1-ந் தேதி தலா ரூபாய் 1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
*

Share this story