வெள்ளத்தில் தவிக்கும் கன்னியாகுமரி : மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு..

Kanyakumari affected by floods Normal life of people severely affected ..

கன்னியாகுமரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 

இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீரை திறந்து விட்டனர். அவை ஆறுகளில் பாய்ந்து வந்தது.

ஆனால், ஏற்கனவே கரையை தொட்டு ஓடிய வெள்ளத்துடன், உபரி நீரும் சேர்ந்து கொள்ள அவை மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்தது.

இதன் காரணமாக, நேற்று நள்ளிரவில் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

பெருவெள்ளம் :

இதுபோல, சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில் முன்பும் வெள்ளம் தேங்கியது. இக்கோவிலின் எதிரே தெப்பகுளம் உள்ளது. அந்த  குளமும், அதன் கரையும் தெரியாத அளவுக்கு மழை வெள்ளம் தேங்கி நின்றது. 

தெரிசன்கோப்பு கோவில், இரணியல் வள்ளியாறு செல்வராஜ கணபதி கோவில், குழித்துறை கோவில் என பல கோவில்களிலும் மழை வெள்ளம் தேங்கியது.

இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதிக்கு ஆளானார்கள். அவர்கள் கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ளத்தை அகற்றும் பணியில்  ஈடுபட்டனர்.

மழை வெள்ளம் புகுந்த வீடுகளில் குடியிருந்த மக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர். நாகர்கோவில் மற்றும் சுசீந்திரம், ஆஸ்ராமம், புறவழிச்சாலை பகுதிகளில் நேற்று நள்ளிரவில் தான் ஆறுகளில் உடைப்பெடுத்து வெள்ளம் வந்தது. அவை அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால், பல இடங்களில் சுமார் 6 அடிக்கு மேல் வெள்ளம் தேங்கியது.

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். 

இன்று காலை வரை அந்த பகுதியில் உள்ள மக்கள்  மீட்கப்பட்டு, அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கடும் பாதிப்பு :

தொடர் மழை காரணமாக, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இருப்பதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் முழுமையாக வடிந்த பிறகுதான் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிதண்ணீர் வினியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு  இருக்கிறது. மின்சாரம் இல்லாததால், அத்தியாவசிய பணிகளில் முடக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

எச்சரிக்கை :

மழை அவஸ்தையோடு மின் இணைப்பும் இல்லாததால், மக்களின் பரிதவிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

3 நாள் மழைக்கே தாக்குபிடிக்க முடியாமல் திணறி வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதனால் ஏற்கனவே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதற்காக, 200 பேரிடர் மீட்பு படையினர் களத்தில் உள்ளனர். அவர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால், நிவாரண பணிகளை முடுக்கிவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமைச்சர்கள் பெரியகருப்பன், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று கன்னியாகுமரி வந்துள்ளனர். 

அவர்களுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
*

Share this story