கருணாபுரம் பகுதியில் கதறல்.. வீடுக்கு வீடு சடலம்.! தாய், தந்தையை இழந்து தவிக்கும் 10 வயது சிறுமி..

By 
metha

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து  கணவன்- மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயத்தை கள்ளத்தனமாக விற்ற நபரிடம் 132 பேர் வாங்கி குடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு வாந்தி  கண் எரிச்சல் தலை சுற்றல் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலமாகவும் ஆட்டோ மூலமாகவும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

சிலரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் 17 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் 01, சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 பேரும் உள்ளிட்ட 95 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

இதில், 5 பெண்கள் அடங்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோருக்கு கண் பார்வை பறி போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சியில் விஷம் சாராயம் குடித்த கணவன் சுரேஷ் உயிரிழந்த நிலையில் அவரைத் தொடர்ந்து மனைவி வடிவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர்களது 10 வயது சிறுமி  தாய், தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. 

Share this story